Wednesday, December 29, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 14

முன் பதிவில் கட்டளைக் கலித்துறை என்பது பற்றி எழுதியிருந்தேன்.இது மிக கடினமான யாப்புக் கட்டமைப்புக் கொண்டது.

அதில் முதற்சீர் நேரசையில் இருந்தால் அந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 16 எழுத்துக்களைக் கொண்டு முதல் மூன்று சீர்கள் ஒவ்வொரு அடியிலும் இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும் கொண்டு , மொத்தப் பாடலில் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 64 எழுத்துக்கள் வரும்.
முதற்சீர் நிரைசையில் இருந்தால் அந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 17 எழுத்துக்களைக் கொண்டு முதல் மூன்று சீர்கள் ஒவ்வொரு அடியிலும் இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும் கொண்டு 
மொத்தப் பாடலில் ஒற்றெழுத்துக்கள் நீக்கி 68 எழுத்துக்கள் 

வரும்.

ஒவ்வொரு அடியிலும் ஈற்றுச்சீர்,அதாவது நான்காவது சீர் கருவிளங்காய்,கூவிளங்காய், என்ற வாய்பாட்டைக் கொண்டு முடியும்.

இது போல முழுவதும் கட்டளைக் கலித்துறையில் எழுதப்பட்ட நூல்கள் கோவை என அழைக்கப்படும்.

(1)அம்பிகாபதிக் கோவை
(2)பாண்டிக் கோவை
(3)தஞ்சை வாணர் கோவை
(4)திருக் கோவையார்
(5)யாப் பெருங்கலக் காரிகை

இன்னும் வலைப் பதிவு நிறைவடையவில்லை
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Saturday, December 4, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 13

நான் கண்ட படங்களிலே மஹா கவி காளிதாஸ் எனக்கு அனைத்துப் பாடல்களும் மிகவும் பிடித்த படம் இது.இதில் கட்டளைக் கலித்துறை என்பது வெண்பாவில் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்களை நீக்கி 16 எழுத்துக்களை மட்டும் அமைத்துப் பாடுவது.


அதாவது முதலடியில் ஒற்றெழுத்துக்களை( புள்ளி வைத்த எழுத்துக்களை) நீக்கி 16 எழுத்துக்கள் இருந்தால் மற்ற மூன்று அடிகளிலும் அதே போல் ஒற்றெழுத்துக்களை நீக்கி 16 எழுத்துக்களே வரும்.


கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்


தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!


முதலடியில்
த+க+மே+தா+ம+ரை+மொ+டு+க+ளா+கி+த+லை+யெ+டு+க=16 எழுத்துக்கள்
இரண்டாமடியில்

கு+கு+ம+தோ+த+மு+க+பி+னி+வ+டு+கொ+லு+வி+ரு+க=16 எழுத்துக்கள்
மூன்றாமடியில்
ப+க+ய+வி+தை+ப+டை+பா+கி+நி+கு+ப+சு+கொ+டி+மே=16 எழுத்துக்கள்

நான்காமடியில்

பொ+கி+யே+பூ+த+மு+ழு+நி+லா+வ+ண+பு+ற+ப+ட+தே=16 எழுத்துக்கள்

இந்த ஒளிப்படக்காட்சியைக் காணுங்கள்



இதில் மஹா கவி காளிதாஸ் கூறும் பாடலின் விளக்கம் தங்கமே தாமரை மொட்டுகள் போலாகி உன் ஸ்தனங்கள் தலையெடுத்து நிற்க,குங்குமம் தோய்ந்த முகத்தினில் கருவண்டுகளாக கண்கள் நின்று காட்சியாக கொலுவிருக்க,பிரம்மனின்(தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பங்கயன்) விந்தைப் படைப்பாகி நிற்கும்,பசுங்கொடிபோல் நிற்கும் மங்கையின் மேல் பகுதியில் பொங்கியே நிற்கும் முழு நிலாப் போல் உன் முகம் தோன்றுகிறது,என்று ஒரு பொருள்படும்.

இன்னோர் பொருள் தங்கமே தாமரை மொட்டுகளாகித் தலையெடுத்து நிற்க,குங்கும நிறம் போல் நிறம் தோய்ந்த தாமரை மலர் முகப்பினில் தேனுண்ணும் வண்டுகள் கொலுவிருக்க,பங்கயன்(தாமரை) ஆன தந்தைத் தாமரையின் படைப்பாகி நிற்கும் மகளாகிய தாமரைக் கொடிமேல் பொங்கியே பூத்த முழு நிலா புறப்பட்டு நிற்கிறதே என்று பொருள்படும்.

இதில்போஜராஜன் மஹா கவி காளிதாஸிடம் கவி முரண் பற்றி கேள்வி கேட்கிறார்.அதாவது ஒரு கவிக் காட்சியை வருணிக்கும் போது அதில் வேறுபட்ட வேளைகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூறக்கூடாது,அதை கவி முரண் என்பார்கள்.எனவே இரவில் வரும் சந்திரனும்,பகலில் மலரும் தாமரையும் சந்திக்கிறதே என்று கேட்கிறார்.

அதை மஹா கவி காளிதாஸ் மறுத்து இரவில் வரும் நிலவையும்,பகலில் மலரும் தாமரை, என்று தெரிந்ததனால்தான் இரவில் அது மொட்டாக இருக்கும் தாமரை மொட்டு என்று கூறியுள்ளேன்,என்பதால் இது கவிமுரண் இல்லை என்கிறார்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Thursday, December 2, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 12

பயனில்லாத ஏழு விஷயங்களை இங்கு பார்ப்போம்.


ஆபத்துக் குதவாப் பிள்ளை யரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர்
கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே!


ஆபத்து சமயத்திற்கு உதவாத பிள்ளை,அருமையான பசி வேளையில் உதவாத சோறு(அன்னம்),தாகத்தை தீராத தண்ணீர்,குடும்பத்தின் தரித்திர நிலை தெரியாத குடும்பப் பெண்கள்(மனைவி,  மகள்,  அம்மா,  சகோதரி, அத்தை, அண்ணி, கொழுந்தியாள், நாத்தனார்), கோபத்தை அடக்க முடியாத மன்னன்( இக்காலத்தில் அமைச்சர்கள்),குருவான ஆசிரியரின் அறிவுரைகள், கருத்துக்கள், பாடங்களை கற்று வாழ்க்கையில் கடைப்பிடிக்க தெரியாத மாணவன், பாபம் செய்தவரை அப்பாபத்திலிருந்து விடுவிக்காத தீர்த்தம், இவை ஏழும் பயனில்லை என்று கூறுகிறது விவேக சிந்தாமணி.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்