Saturday, December 4, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 13

நான் கண்ட படங்களிலே மஹா கவி காளிதாஸ் எனக்கு அனைத்துப் பாடல்களும் மிகவும் பிடித்த படம் இது.இதில் கட்டளைக் கலித்துறை என்பது வெண்பாவில் ஒவ்வொரு அடியிலும் ஒற்றெழுத்துக்களை நீக்கி 16 எழுத்துக்களை மட்டும் அமைத்துப் பாடுவது.


அதாவது முதலடியில் ஒற்றெழுத்துக்களை( புள்ளி வைத்த எழுத்துக்களை) நீக்கி 16 எழுத்துக்கள் இருந்தால் மற்ற மூன்று அடிகளிலும் அதே போல் ஒற்றெழுத்துக்களை நீக்கி 16 எழுத்துக்களே வரும்.


கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்


தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!


முதலடியில்
த+க+மே+தா+ம+ரை+மொ+டு+க+ளா+கி+த+லை+யெ+டு+க=16 எழுத்துக்கள்
இரண்டாமடியில்

கு+கு+ம+தோ+த+மு+க+பி+னி+வ+டு+கொ+லு+வி+ரு+க=16 எழுத்துக்கள்
மூன்றாமடியில்
ப+க+ய+வி+தை+ப+டை+பா+கி+நி+கு+ப+சு+கொ+டி+மே=16 எழுத்துக்கள்

நான்காமடியில்

பொ+கி+யே+பூ+த+மு+ழு+நி+லா+வ+ண+பு+ற+ப+ட+தே=16 எழுத்துக்கள்

இந்த ஒளிப்படக்காட்சியைக் காணுங்கள்



இதில் மஹா கவி காளிதாஸ் கூறும் பாடலின் விளக்கம் தங்கமே தாமரை மொட்டுகள் போலாகி உன் ஸ்தனங்கள் தலையெடுத்து நிற்க,குங்குமம் தோய்ந்த முகத்தினில் கருவண்டுகளாக கண்கள் நின்று காட்சியாக கொலுவிருக்க,பிரம்மனின்(தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பங்கயன்) விந்தைப் படைப்பாகி நிற்கும்,பசுங்கொடிபோல் நிற்கும் மங்கையின் மேல் பகுதியில் பொங்கியே நிற்கும் முழு நிலாப் போல் உன் முகம் தோன்றுகிறது,என்று ஒரு பொருள்படும்.

இன்னோர் பொருள் தங்கமே தாமரை மொட்டுகளாகித் தலையெடுத்து நிற்க,குங்கும நிறம் போல் நிறம் தோய்ந்த தாமரை மலர் முகப்பினில் தேனுண்ணும் வண்டுகள் கொலுவிருக்க,பங்கயன்(தாமரை) ஆன தந்தைத் தாமரையின் படைப்பாகி நிற்கும் மகளாகிய தாமரைக் கொடிமேல் பொங்கியே பூத்த முழு நிலா புறப்பட்டு நிற்கிறதே என்று பொருள்படும்.

இதில்போஜராஜன் மஹா கவி காளிதாஸிடம் கவி முரண் பற்றி கேள்வி கேட்கிறார்.அதாவது ஒரு கவிக் காட்சியை வருணிக்கும் போது அதில் வேறுபட்ட வேளைகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூறக்கூடாது,அதை கவி முரண் என்பார்கள்.எனவே இரவில் வரும் சந்திரனும்,பகலில் மலரும் தாமரையும் சந்திக்கிறதே என்று கேட்கிறார்.

அதை மஹா கவி காளிதாஸ் மறுத்து இரவில் வரும் நிலவையும்,பகலில் மலரும் தாமரை, என்று தெரிந்ததனால்தான் இரவில் அது மொட்டாக இருக்கும் தாமரை மொட்டு என்று கூறியுள்ளேன்,என்பதால் இது கவிமுரண் இல்லை என்கிறார்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

10 comments:

  1. இப்படி ஒரு பா இருப்பதே தெரியாது.. வேறு ஏதாவது விதிகள் உண்டா? தளை? சீர்?

    ReplyDelete
  2. படத்தைப் பார்க்க முடியவில்லையே?

    ReplyDelete
  3. நன்றி திரு அப்பாதுரை அவர்களே,
    இது சாதாரண வெண்பாவின் அனைத்து விதிமுறைகளையும் கடைப் பிடிப்பதோடு,கலித்தளை நிரவி வந்து,அடிதோறும் 16 எழுத்துக்கள் கட்டளையிட்டது போல அமைவதால் இது கட்டளைக் கலித்துறை என பெயரிடப்பட்டுள்ளது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. நன்றி திரு அப்பாதுரை அவர்களே,
    யூ டுயூப் செட்டப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டது.இப்போது படம் தெரியும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. பாடலும், காட்சியும் தாங்கள் தொகுத்து அளித்த விதமும்
    மிக அருமை

    நன்றி சாமீ ஜி
    உங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
    இது போல பல மரபுக் கவிதைகள் உள்ளன.வரும் காலங்களில் நம் பதிவில் காண்போம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. அடிக்கடி இப்பக்கம் வாருங்கள் ஐயா, காத்து கண் நோவுகிறது.

    ReplyDelete
  8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    இதோ வந்தூட்டேன்!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. என்னுடைய அடுத்த பதிவின் இணைப்பை இத்துடன் கொடுத்துள்ளேன்.அதில் கட்டளைக்கலித்துறைக்கான அனைத்து விதிகளையும் கொடுத்துள்ளேன்.அனைத்து பதிவுகளையும் பார்த்த பின் கருத்துரை இடவும். http://kavithaichcholai.blogspot.com/2010/12/14.html என்னால் கட்டளைக்கலித்துறைப் பாடல் என்னால் இயற்ற இயலும் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்