Saturday, October 9, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 11(சரஸ்வதி பூஜை ஸ்பெஷல்)

காளமேகம் எனக்கு பிடித்த தலைமைப் புலவர்.அவர் எழுதிய கவிதைகள் பலர் பலருடைய வலைப் பூக்களில் வெளியிடுகின்றனர். சித்தர் ராச்சியம் தோழியும்,ஞான வெட்டியான் அவர்களும் வெளியிடுகின்றனர்.  அவர்கள் வெளியிடும் பாடல்கள் தவிர்த்து பிற பாடல்கள் மட்டுமே வெளியிட முயற்சி செய்கிறேன்.

ஒருமுறை அதிமதுர கவிராயர் என்பவர் வீணான படாடோபத்துடன் ( இப்போதைய வார்த்தைகளில் பந்தாக் காட்டுவது ) யானை மீது ஏறி பல புலவர்கள் சூழ்ந்து நடந்து வர கொட்டு முழக்கமிட,அதிமதுர கவி வருகிறார் ! வருகிறார் ! பராக்! பராக்! பராக்! என்று பராக்காரன் புகழ்ந்து பறை சாற்ற ,வீரர்கள் வீதியில் இருப்போர்களை போ!போ! என்று விரட்ட,அவ்வழியே வந்த நம் கவி காளமேகம் இதைக் கண்டு கோபம் கொண்டு கீழ்க் காணும் கவியைப் பாட

அதிமதுர மென்றே அகிலமறிய

அதிமதுர மாயெடுத்துச் சொல்லும் ;- புதுமையென்ன?

காட்டுச் சரக்குலகில் காரமில் லாச்சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு.

பொருள் ;- அதிமதுரம் என்று என்று உலகோர் அறியும்படி அதிமதுரமாகப் புகழ்ந்து பறை சாற்றுகின்றையே! காட்டிலுள்ள சரக்குகளில் காரமில்லாத சரக்கு எதுவென்றும் ? கூட்டி உபயோகிக்கின்ற சரக்கு எதுவென்றும் கூறு?

என்பதாகப் பாடினார். 

அதிமதுரத்தை எப்போதும் மற்ற மருந்துகளுடன் கூட்டுச் சரக்காகவே உபயோகிக்க மாட்டார்கள்.தனிச் சரக்காக உபயோகிக்க மாட்டார்கள். அதுபோல தனியாக பிரகாசிக்கும் எந்தத் திறமையும் இல்லாத நீ ஏன் இந்தப் படாடோபம் செய்கிறாய் ? என்ற கருத்தோடு இதைக் கூறினார்.

இதைக் கேட்டவுடன் அதிமதுர கவி தூக்கிப் போட்டாற் போலிருந்ததனால்,  கோபம் கொண்டுஇவன் இவ்வளவு அவமரியாதையாகப் பேசுகிறான் அரசரிடம் கூறி இவனுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் அவன் யாரென்று விசாரித்து வா என்று ஒரு வீரனை அனுப்பி வைத்தான்.

அந்த வீரனும் கவி காளமேகத்தைப் பார்த்து நீர் யார்உம் பேர் என்னஉம் ஊர் யாது?என்று விசாரிக்ககவி காளமேகம் நான் சொல்வதை யெல்லாம் உன்னால் திருப்பிச் சொல்ல முடியாது எனவே நான் ஒரு ஓலையில் இதை எழுதித் தருகிறேன்.என்று கூறி கீழ்க் கண்டவாறு எழுதித் தந்தார்,

தூதைந்து நாழிகையில் ஆறுநாழிகைதனில்

சொற் சந்த மாலை சொல்லத்

துகளிலா அந்தாதி யேழுநா ழிகைதனில்

தொகைபட விரித்துரைக்கப்

பாதம்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனில்

பரணியொரு நாள்முழுதுமே

பாரகாவியமெலாம் ஓரிரு தினத்திலே

பகரக் கொடி கட்டினேன்

சீதம்செ யுந்திங்கள் மரபினான் நீடுபுகழ்

செய்யதிரு மலை ராயன்முன்

சீருமா றாகவே தாறுமா றுகள்சொல்

திருட்டுக் கவிப் புலவரைக்

காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்

கதுப்பில் புடைத்துவெற்றிக்

கல்லணையி னோடுகொடிய கடிவாளம் இட்டேறு

கவிகாள மேக நானே.

என்று தம் ஆசுகவித் திறத்தைச் சிறப்பித்தும்,தன் பெயரை வெளிப்படையாகச் செப்பியும்,திருமலைராயன் சமஸ்தானத்து வித்துவான்கள் அக்ரமத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியும் அவர்களை இகழ்ந்தும் ஒரு சீட்டுக்கவி எழுதி அந்த வீரனிடம் கொடுத்தனுப்பினார்.

இந்த விஷயதைக் கேட்ட அதிமதுர கவிராயர் மன்னரிடம் மன்னரே  அவன் எங்களை மட்டுமல்ல ,உங்களையும் உங்கள் சமஸ்தானத்து கவிராயர்களையும் அவமதித்துள்ளான்,எனவே நான்கு வீரர்களை அனுப்பி அவனை இழுத்து வரச் செய்து தக்க தண்டணை வழங்க வேண்டும் என்று கூறினர்.இது கேட்ட மன்னன் திருமலைராயன் உடனே நான்கு வீரர்களை அனுப்பி கவி காளமேகத்தை பிடித்து இழுத்து வரச் சொல்லி ஆணையிட்டார்.

அவர்கள் கவி காளமேகத்தைப் பிடித்து இழுத்து வர முயற்சிக்கையில்அவர் வீரர்களைப் பார்த்து என்ன தவறு செய்தேன்.நான் குற்றவாளி அல்ல நான் பெருங் கவி காளமேகம் வீண் தொல்லை செய்தால் அறம் பாடி அழித்துவிடுவேன்.


(அறம் பாடுதல் என்பது அக்காலத்தில் இறைவனிடம் நேரடியாக அறத்தைக் கூறி அறம் நிலைநாட்டுதல் அதன் மூலம் அறம் குலைத்தவர்களை தண்டித்தல்.ஒரு நூற்றாண்டு முன் வரை அறம் பாடி அவர் பாடலால் தீபம் ஏற்றப்பட்டால் அவர் குற்றவாளியல்ல என்று நிரூபித்துள்ளார்கள்என்று சொல்ல வீரர்கள் பயந்து பணிவோடு ஒதுங்கி விலகி நின்றார்கள்.நானே வருகிறேன் என்று கூறினார்.

அரசன் சமூகத்திற்கு சென்றால் அங்கே,அரசனைச் சுற்றி அதிமதுர கவிராயர் அரசவைக் கவிஞராக அமர்ந்திருக்க, அரசனைச் சுற்றி நெருக்கமாக அவைப் புலவர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டு,கவி காளமேகத்தை அரசனிடம் நெருங்க விடாமலும் ஆசனம் கொடுக்காமலும் பாராமுகமாக இருந்தனர்.

இது கண்ட கவி காளமேகம் அரசனிடம் ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து நீட்ட,பெரியோர்கள் தரும் அட்சதை,பூ,பழம் இவற்றை மறுக்கவோ, அவமதிக்கவோ கூடாது என்பது விதியாகையால்,மன்னன் கை நீட்டி அதைப் பெற முயல அவைப் புலவர்கள் விலகி வழிவிட்டனர்.


மன்னன் எலுமிச்சம் பழம் பெற்ற பின்னும் ஏதும் பேசாமலும்கவி காளமேகத்துக்கு ஆசனம் அளிக்காமலும் இருந்தான்.அது கண்டு வெகுண்ட கவிகாளமேகம்ஜம்புகேச்சுவரத்தின் (இன்றைய திருவானைக் காவல்) திசையை நோக்கி மானசீகமாகஅகிலாண்டவல்லி தேவி சாரதையை(சரஸ்வதி தேவியை) தியானித்து கீழ்க்கண்ட பாடலைப் பாடினார். 

'வெள்ளைக் கலையுடுத்து,வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள்;-வெள்ளை

அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

சரியாச னத்துவைத்த தாய்

என்பது முதற்கொண்ட 'சரஸ்வதி மாலை'என்ற ஒரு பிரபந்தம் பாடினார்.அவ்வளவில் வாணி கடாட்சத்தால் திருமலை ராயன் இருந்த ஆசனம் வளர்ந்து கவி காளமேகம் அமர இடம் தந்தது.

இன்று சரஸ்வதி பூஜை எனவே இன்றைய தேதியிலேயே இதை வெளியிட வேண்டி இன்று வரை முழுமையாக்காமல் வைத்திருந்தேன்.இன்று எல்லோரும் வாணியை வேண்டி கல்வியும்,வளமும்,நலமும் பெற்று வாழ வேண்டுகின்றேன். 

படிக்கும் அன்பர்கள் தயவு செய்து கருத்துரை பதியவும்.இது எனக்கு அடுத்த பதிவு எழுத அவசியம் தேவை.

நன்றி

என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

9 comments:

  1. படித்துவிட்டு எதாவது நல்லா நாலு வார்த்தை எழுதிட்டுப் போங்க!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    அன்பன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  2. அன்பரே ,
    உங்கள் கவி திறனை நினைத்து வியக்கிறேன் !!!

    என்றென்றும் !!!
    உங்கள் விசிறி !!

    ReplyDelete
  3. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே.வெகு நாட்களாக இந்த வலைப் பூ பக்கம் வந்து போனதாகக் கூட தடம் தெரியாத சூழ்நிலையில் ஒரே ஒரு கருத்துரை(பின்னூட்டம்). மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. அன்பரே ,
    இந்த வலைப்பூவில் , சுவாரசியமான சில தொடர்கதைகள் ., சிறு கதைகள் ., படித்ததில் பிடித்தது ., இவ்வாறான விசியங்களை ஏழுதினால் . , நல்ல வரவேற்ப்பு இருக்கும் என நினைகிறேன் .,!!!
    இது என் தாழ்மையான கருத்து ..,!!!

    ReplyDelete
  5. எவ்வளவு விசயங்கள் உங்கள் வலை தள‌த்தில், தொடருங்கள்...

    என்றும் நட்புடன்,
    தேவன்.

    ReplyDelete
  6. தங்களது வலைத் தளத்தை பார்வையிட்டேன்.மிக நன்றாக உள்ள வலைப் பூ இது.இது போன்று பல சித்தர்களின் நூல்களையும் அற்புதமான நுண்ணறிவையும் கொண்ட நம் தமிழ் இங்கு வாழ்க்கையில் உபயோகப்படாது என்று தமிழர்களே எண்ணும் அளவு தரம் தாழ்ந்து போனது கண்டு வருந்தி நிற்பவர்களில் அடியேனும் ஒருவன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. அருமையான வரலாறு நண்பரே... சரஸ்வதி மாலையும் கிடைக்குமா?

    ReplyDelete
  8. தஙகளின் தமிழாறறல் எனனை மிகவும்கவர்ந்துள்ளது மூது தமிழ் முதல் மருந்து மாந்த்ரீகம் வறை கற்றுள்ளீர் தங்ளை நடைமறை காலத்து குரு வாக ஏற்று கொள்ளத்தான் வேண்டும்

    ReplyDelete
  9. தஙகளின் தமிழாறறல் எனனை மிகவும்கவர்ந்துள்ளது மூது தமிழ் முதல் மருந்து மாந்த்ரீகம் வறை கற்றுள்ளீர் தங்ளை நடைமறை காலத்து குரு வாக ஏற்று கொள்ளத்தான் வேண்டும்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்