Tuesday, September 28, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 8

சில புலவர்கள் பொறாமையின் காரணமாக அவ்வையார் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்து வந்தனர். ( இந்தக் காலத்தில் இவ்வளவு பெண்ணடிமைத்தனம் இருக்கும்போது, அந்தக்காலத்தில் எவ்வளவு இருந்திருக்கும்).
கம்பர் சிலம்பி என்றொரு தாசியை ஐந்நூறு பொன் பெற்று ஏழையாக மாற்றியதை அவ்வையார் பணக்காரியாக மாற்றியதால் அவ்வையார் மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்த கதையை இப்போது பார்ப்போம்.

மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த பின் கம்பர் அவ்வையாரைப் பார்த்து  அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக

'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ' 

கம்பர் கேட்க

அவ்வையார் கம்பரைப் பார்த்து 

'எட்டேகால் லட்சணமே ! எமனே றும்பரியே !
மட்டில் பெரியம்மை வாகனமே !;-முட்டமேற்
கூரையில்லா வீடே ! குலராமன் தூதுவனே !
ஆரையடா சொன்னா யது ! ' 

அவ்வையார் சொல்ல கம்பர் வெட்கித் தலை குனிந்தார்.

 {கம்பர் அவ்வையாரைப் பார்த்து அவ்வையாரை அடியே என்றழைப்பதற்காக'ஒரு காலடி நாலடிப் பந்தலடீ' என்று கேட்டது ஒரு கால் அடியாகவும் நாலிலைப் பந்தலடியாகவும் இருப்பது ஆரைக் கீரை.

அதற்கு அவ்வையார் கம்பரைப் பார்த்து எட்டு என்பது தமிழ் எழுத்துக்களில் 'அ' ,அதே போல் கால் என்பது தமிழ் எழுத்துக்களில் ' வ '
அதன்பின் உள்ள லட்சணமே சேர்ந்தால் அவலட்சணமே! என்றும், எமனேறும் பரி என்பது எருமை மாடே! என்றும், மட்டில் பெரியம்மை வாகனமே !என்பது மூத்த தேவியான மூதேவியின் வாகனமான கழுதையே! என்றும்,முட்டமேற் கூரையில்லா வீடே !, என்பது கூரையில்லா வீடு குட்டிச்சுவரே! என்றும், குலராமன் தூதுவனே !என்பது குல ராமன் தூதுவன் அனுமன் குரங்கு என்பதால் குரங்கேஎன்றும், ஆரையடா சொன்னாய் அது! என்பது ஆரைக் கீரையைத்தானடா சொன்னாய்! என்றும், பொருள் தரும்.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

சில தனிப்பாடற் காட்சிகள் 7

சில புலவர்கள் பொறாமையின் காரணமாக அவ்வையார் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்து வந்தனர். ( இந்தக் காலத்தில் இவ்வளவு பெண்ணடிமைத்தனம் இருக்கும்போது, அந்தக்காலத்தில் எவ்வளவு இருந்திருக்கும்).

அப்போது,
சோழ நாட்டில் சிலம்பி என்றொரு தாசி கம்பருடைய வாக்கினால் பாடப் பெற்றால் தான் மிகுந்த செல்வமுடையவளாக ஆகலாம் என்று எண்ணி கம்பரிடம் தான் வைத்திருந்த ஐந்நூறு பொன்னைக் கம்பரிடம் கொடுத்து அவள் தன்னைப் பாடச் சொல்லிக் கேட்க அவர் அந்த ஐந்நூறு பொன்னை வாங்கிக் கொண்டு நான் ஆயிரம் பொன்னுக்குத்தான் ஒரு பாட்டுப் பாடுவேன் ,என்று கூறி நீ தந்த ஐந்நூறு பொன்னுக்கு அரைப் பாட்டுத்தான் பாடுவேன் என்று கூறி 


'தண்ணீரும் காவிரியே ; தார் வேந்தன் சோழனே ;
மண்ணாவதும் சோழ மண்டலமே '


என்று கம்பர் அரைப்பாட்டுப் பாடி நிறுத்திவிட்டார்.கம்பருடைய வாக்கினால் பாடப் பெற்றால் தான் மிகுந்த செல்வமுடையவளாக ஆகலாம் என்று எண்ணி நாம் இவ்வளவு நாள் சேர்த்து வைத்த பணத்தை கொடுத்தால் இவர் பாதியில் பாட்டை நிறுத்திவிட்டாரே என்று வருந்தினாள்.இவ்வளவு நாள் சேர்த்து வைத்த பணமும் போய் நாம் நினைத்தது போல் கவி வாயால் பாடப் பெற்றால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று எண்ணினால்,கையிலிருந்த காசைக் கொடுத்து வறுமையை வாங்கி ,உள்ளதும் போய் பஞ்சைப் பராரியாய், உண்ண  உணவும் உடுக்க உடையும் இல்லாது ஆகிவிட்டோமே என்று நொந்து போனாள்.


அவளது ஊழ்வினைப் பயன் காரணமாக அவள் வீட்டு வழியில் சென்ற  
அவ்வையார் களைப்பின் மிகுதியால் அவள் வீட்டில் அமர்ந்து 'அம்மா வெயில் களைப்பினால் அவதியுற்றிருக்கிறேன், சிறிது கூழ் இருந்தால் ஊற்று ' என்று வேண்டினாள். உடனே அந்தத் தாசியானவள் வீட்டின் உள்ளே சென்று தான் குடிக்க வைத்திருந்த கூழைக் குடிக்கக் கொடுத்தாள். அவ்வளவில் அவ்வையார் களைப்பு நீங்கி இது உன் வீட்டின் முன் பாதிக்கவி எழுதி இருக்கிறதே என்று கேட்க, சிலம்பி கம்பருடைய வாக்கினால் பாடப் பெற்றால் தான் மிகுந்த செல்வமுடையவளாக ஆகலாம் என்று எண்ணி ஐந்நூறு பொன்னை இழ்ந்த கதையைச் சொன்னாள்.
உடனே அவ்வையார்'கம்பர் பொன்னுக்குப் பாடி என்றால் நான் கூழுக்குப் பாடி ' எனக் கூறி மீதியை நான் பாடித் தருகிறேன் என்று கூறி
'--------------------------------------------------------------------------------;-பெண்ணாவாள்
அம்பற் சிலம்பி அரவிந்தத் தாள ணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு'


என அவ்வையார் முடித்து வைக்கவும். அவள் மிகுந்த செல்வம் மிகுந்தவளாய் ஆனாள்.






'தண்ணீரும் காவிரியே ; தார் வேந்தன் சோழனே ;





மண்ணாவதும் சோழ மண்டலமே

;-பெண்ணாவாள்

அம்பற் சிலம்பி அரவிந்தத் தாள ணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு'

இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட கம்பர் அவ்வையார் மீது மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை நிந்தனை செய்த கதையை அடுத்தசில தனிப்பாடற் காட்சிகள் 8 ல் காணலாம்

நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   





Monday, September 20, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 6

இன்று ஒரு புதிய பாடல் அமைப்போடு உங்களைச் சந்திக்கிறேன்.
அது அந்தாதி.ஒரு பாடலின் அந்தம் (முடிவுச் சொல்), அடுத்த பாடலின் ஆதியாக(முதற்சொல்லாக) அமைத்துப் பாடுவது அந்தாதி.
இங்கு பாரதியாரின் கண்ணன் திருவந்தாதியை இங்கு தருகிறேன்.
உங்களுக்குப் புரிவதற்காக அந்தத்தையும், ஆதியையும் தனி நிறத்தில் காணத்தந்திருக்கிறேன்.
கண்ணன் திருவந்தாதி 

கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே ...(1)

தருமே நிதியும் கருமா
மேனிப் பெருமான் இங்கே...(2)

இங்கே அமரர் சங்கந் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே...(3)

நலமே நாடிற் புலவீர் பாடிர்
நிலமாமகளின் தலைவன் புகழே...(4)

புகழ்வீர் கண்ணன் தகைசேரமரர்
தொகையோடசுரப் பகை தீர்ப்பதையே...(5)

தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே...(6) 



நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

Sunday, September 19, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 5

ஒரு முறை கவி காளமேகத்திடம் 'ஈ' ஏற மலை குலுங்கியதாகப் பாடுங்கள்,என்று கேட்க  'ஈ' ஏற மலை என்ன உலகமே குலுங்கியதாகப் பாடுகிறேன்.என்று கீழ்க் கண்ட பாடலைப் பாடினார்.
'வாரணங்கள் எட்டு மகமேருவும் கடலும்
தாரணியும் நின்று சலித்தனவால்-நாரணனைப்
பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயில் ஈ மொய்த்தபோது!'
எட்டுத்திசை யானைகளும்,மஹா மேருமலையும், ஏழுகடல்களும்,உலகமும் நின்று குலுங்கின. எப்போதென்றால்,நாராயணனான கண்ணன், வெண்ணெய் திருடித் தின்றதைக் கண்ட பண் பாடிக் கொண்டிருக்கும் வாயை உடைய இடையர் குலப் பெண் பருமனான மத்தினால் அடித்து உண்டான புண்ணில்' ஈ' மொய்த்தபோது,கண்ணன் உடல் குலுங்கினதால் அந்த உடலில் எட்டுத்திசை யானைகளும்,மஹா மேருமலையும், ஏழுகடல்களும்,உலகமும் இவை அனைத்தும் அடக்கமானதால் இவை அனைத்தும் குலுங்கின.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

Tuesday, September 14, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 4

சிலேடை என்பது மிகவும் சுவரசியமான ஒன்று.அதாவது இரு பொருள் படப் பாடுவது சிலேடை. ஒரு பாடலில் அப்படியே வைத்து இரு பொருள் படப் பாடுவது செம்மொழிச் சிலேடை. பிரித்துப் பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை.

கவி காள மேகப் புலவர் செம்மொழிச் சிலேடை,பிரிமொழிச் சிலேடை, இரண்டையும் பாடுவதில் வல்லவர்.

கவி காள மேகப் புலவர் ஒரு முறை யம கண்டம்( யம கண்டம் பற்றி வெறோர் வலைப் பூவில் பார்க்கலாம் ) பாடிய போது பின்னங்கள் (ஒன்றுக்கு கீழ் உள்ள அளவுகள்) அத்தனையும் ஒரே வெண்பாவில் வைத்துப் பாடச் சொல்லி எதிர் வழக்காடும் புலவர் கேட்க அதற்கு கவி காளமேகம் பாடிய பாடல்.

முக்காலுக் கேகா முன், முன் னரையில் வீழாமுன் 
அக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் -விக்கி 
இருமாமுன் மாகாணிக் கேகா முன் கச்சி
ஒரு மாவின் கீழரையின் றோது.


முதலிற் ஒரு பொருள் கூறல்;-பின்னங்கள்(ஒன்றுக்கு கீழ் உள்ள அளவுகள் அத்தனையும் )
1)முக்கால் = 3/4
2)அரை = 1/2
3)கால் =1/4
4)அரைக்கால் =1/8
5)இருமா = 1/10
6)மாகாணி =1/16 அல்லது (வீசம்)
7)ஒரு மா = 1/20 
பிறகு வேறோர் பொருள் கூறல்;- (முக்காலுக்கேகாமுன்) கிழப் பருவம் எய்தி மூன்று கால்களில் (இரண்டு கால்கள்+கைத்தடி= மூன்று கால்கள்) நடப்பதற்கு முன்னால், முன்னால் நரை ஏற்பட்டு அதில் விழுவதற்கு முன்,அக்காலரைக்கால் கண்டு அஞ்சாமுன் ( அந்த எம தூதர்கள் இதோ வந்து விட்டார்கள்,அதோ வந்து விட்டார்கள், என்று சொல்லி அச்சப்படுவதற்கு முன்,ஒரு விக்கல் விக்கி இருமி உயிர் பிரிவதற்கு முன்(ஒரு விக்கல் விக்கி இருமியே உயிர் பிரியும்),மாகாணிக் கேகா முன்(மாகாணி என்பது (இ)சுடுகாடு
 .உலகத்தில் உள்ள உயிர்களை யெல்லாம் வாங்கிக் கொள்ளும் காணி மாகாணி. அந்த மாகாணிக்கு போவதற்கு முன்னம்,ஒரு மாவின் கீழரையின் றோது,(ஒரு மரா மரத்தின் கீழே இருக்கின்ற இறைவனை இன்றே ஓதி ,உணர்வீர் .
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன், 

Monday, September 13, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 3

கவி காளமேகப் புலவர் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.ஏனெனில் இனி காளமேகப் புலவர் பாடல்கள் அதிகம் பார்ப்போம்.

ஒரு முறை சம்புகேசுவரம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட திருவானைக்காவல் என்று தற்போது அழைக்கப்படும் திவ்விய திருத்தலத்தில்,ஒரு பிராம்மணன்வித்தைகள் அத்தனையிலும் பூரண பாண்டித்தியம்( உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் யாரும் சொல்லித்தராமலேயே அத்தனையும் தெரிந்த புலவராக ஆகுவதற்காக) திரிபுரைச் சக்கரம் ஸ்தாபித்து அந்தசக்கரத்துக்குள்ள பீஜ மந்திரங்களை உருவெற்றிக் கொண்டிருக்கும் போது , அகிலாண்டேஸ்வரி வெள்ளைக் கலையுடுத்தி ( வெள்ளைச் சேலை ) வாயில் தாம்பூலம் தரித்து அந்தப் பிராம்மணன் வாயில் உமிழப் போகும் சமயம் அது அவனுக்கு கிடைக்கக் கூடாது என்ற விதியானபடியால்,அவன் அகிலாண்ட நாயகியை ஒரு விதவைப் பெண் இவ்வாறு செய்கிறாள் என்று எண்ணி , சீ அப்பால் போ! என்று கூறிவிட்டான்.

பிரம்மாண்ட கோடி அகிலாண்ட நாயகி சுற்றுப் பிரகாரத்தில் சுற்றி வரும்போது அங்கே பரிசாகரனாக வேலை பார்த்து வந்தவன் வாயைத்திறக்கச் சொல்ல அவனும் அவனுக்கு நல்ல நேரம் ஆனதால் தன் காதலிதான் அவ்வாறு செய்கிறாள் என்று அம்பிகை உமிழ்ந்த தாம்பூலத்தை சுவைத்து விழுங்கிவிட்டான்.

அதிலிருந்து ஊழிக்கால மேகம் மழை பொழிவது போல் பாடல்களாக பொழிந்து தள்ள ஆரம்பித்துவிட்டார்.எனவே அவரது பெயர் கவி காளமேகம் என்று அழைக்க ஆரம்பித்தனர் . அது மட்டுமில்லாமல் கோபம் வந்தால் பாடலிலேயே வசையாக பாடித் திட்டித் தீர்த்துவிடுவார்.எனவே அவரை வசை பாடக் காளமேகம் என்றும் அழைக்க ஆரம்பித்தனர்.

ஒரு முறை நாகைப்பட்டினம் காத்தான் வருணகுலாதித்தன் என்பவருடைய அன்னச் சத்திரத்தில் சாப்பிடுவதற்காக கவி காளமேகம் ஒரு நாழிகை நேரம் காத்துக் கிடந்தார்.அவருக்கோ பயங்கரமான பசி.யாரும் கவனிக்க வரவில்லை என்ற கோபத்தில் கீழ்க்கண்ட பாடலைச் சத்திரச் சுவரில் எழுதி
வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

கேள்விப்பட்ட சத்திரத்து காத்தான் வருணகுலாதித்தன் ஓடோடி வந்து கவி காளமேகத்தை சமாதானம் செய்து,மன்னிப்பு வேண்டி அவரை சாப்பிட வைத்து உபசாரம் செய்து அவ்ர் கோபம் தணித்து இப்படி வசையாகப் பாடினதை மாற்றிப் பாட வேண்ட,  கவி காளமேகம் அதே பாடலையே அப்படியே வாழ்த்தாகப் பொருள் சொல்லி வாழ்த்தினார்.

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் ;-குத்தி
உலையிலிட வூரங்கும் ஓரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி யெழும்.

வசையாகப் பாடியது;-சப்திக்கின்ற கடல் சூழ்ந்தநாகைப்பட்டினத்தில் காத்தான் வருணகுலாதித்தன் அன்னச் சத்திரத்தில் சாப்பிட வருபவர்களுக்கு சூரியாஸ்தமன காலத்தில்தான் அரிசியே வரும்.அதைக் குற்றி உலையில் போட்டு சமைக்கும் போது ஊரில் உள்ளவர்கள் சத்தம் அடங்கித் தூங்கப் போய்விடுவார்கள் (நடு ராத்திரியாகிவிடும்).அப்படி சமைத்த சாதத்தை கொண்டு வந்து இலையில் போடும் போது அதிகாலையாகி வெள்ளி எழும் நேரம் ஆகிவிடும்,என்று பொருள்படும்படி வசையாகப் பொருள் கூறினார்.

வாழ்த்திப் பாடியது;- சப்திக்கின்ற கடல் சூழ்ந்தநாகைப்பட்டினத்தில் காத்தான் வருணகுலாதித்தன் அன்னச் சத்திரத்தில் சாப்பிட வருபவர்களுக்கு சூரியாஸ்தமன காலம் வரை இல்(வீட்டு) அரிசி வரும். அதைக் குற்றி உலையில் போட்டு சமைக்கும் போது ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரின் பசியும் அடங்கிப் போய்விடும்.அப்படி சமைத்த சாதத்தை கொண்டு வந்து இலையில் போட்டால் வெள்ளி எழுந்தது போல அந்தச் சோறு வெள்ளியே இலையில் வந்து விழுந்தது போல் மின்னும் .என்று பொருள்படும்படி வாழ்த்திப் பொருள் கூறினார்.
    

சில தனிப்பாடற் காட்சிகள் 2

முன்பொரு காலத்தில் இரட்டைப் புலவர்கள் இருந்தார்கள்.ஒருவர் கண்ணில்லாத குருடர்,மற்றவர் காலில்லாத முடவர்.முடவரை குருடர் தோளில் தூக்கிக் கொள்வார்.முடவர் வழி காட்ட குருடர் அவ்வழியே நடந்து செல்வார்.
ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குளித்துவிட்டு துணிகளை அலசிக் கொண்டிருக்கும் போது குருடரின் துணி நழுவி பொற்றாமரைக் குளத்துக்குள் மூள்க ஆரம்பித்தது.அப்போது முடவர் குருடரைப் பார்த்து

அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ-
 குருடர் முடவர் தன்னைக் கேலி செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு அவர் முடவரைப் பார்த்து
இப்புவியில்
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை
ஆடைகளை (அப்பிலே) தண்ணீரில் தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத் தப்பித் தப்பி அடித்துத் துவைத்தால் (அது துன்பப்பட்டு) நம்மை அந்தத் துணி நம்மைவிட்டு தப்பித்து ஓட முயற்சிக்காதா என்று முடவர் குருடரைப் பார்த்துக் கேட்க ,
அதற்கு குருடர் ஒப்பில்லாத இந்த்த் துணி(கலிங்கம்) போனால் என்ன மாமதுரையில் உள்ள சொக்கலிங்கமான இறைவன் உண்டே துணை என்று பதில் அழித்தார். இந்தப் வெண்பாப் பாடலில் முதலிரண்டு வரிகளை முடவர் பாடியது.பின்னிரண்டு வரிகளை குருடர் பாடியது.ஆனால் பொருள், சந்தம்,இசை இவற்றில் ஒத்திருக்கும் என்பதே இதன் அழகு.

முழுப்பாடல் இதோ
அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ-இப்புவியில்   
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை.
 நன்றி
இப்படிக்கு
சாமீ அழகப்பன்

சில தனிப்பாடற் காட்சிகள் 1

குலோத்துங்க சோழன் தனது அவையில் உள்ள ஒட்டக்கூத்தர்,புகழேந்திப் புலவர்
ஆகியோரைப் பார்த்து நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்த் தொண்டு புரிந்தால் நலமாயிருக்கும் அல்லவா!
எனவே நீங்கள் இருவரும் திருவையாறு அருகே இருக்கும் திருநெய்த்தானம் என்ற இடத்தில் உள்ள இறைவன் மேல் கருத்து,சொல்,பொருள் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கும் வண்ணம் பாடல்கள் இயற்றுங்கள் என்று கூற அவ்வண்ணமே இயற்றிய பாடல்களை கீழே காணுங்கள்.

விக்கா வுக்கா வித்தாவிப் போய் விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்.
இக்கா யத்தா சைப்பா டுற்றே யிற் றேடிப்போய் வைப்பீர் நிற்பீர்!
அக்கா டப்பேய் தொக்கா டச்சூழப்பா டத்தீ வெப்பா டப்பூண்,
நெக்கா டக்கா னத்தா னத்தா டப்போய் நெய்த்தா னைச் சேவித்தே.
                                                      (ஒட்டக் கூத்தர்)
விரிவுரை
விக்கி ஆவி தாவிப் போய் விட்டால் நட்டார் சுட்டூர் புக்கார்
இந்த காயத்து ஆசைப்பாடுற்றே இல் தேடிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடு அப்பேய் தொக்கி ஆடச் சூழப் பாடத்தீ வெப்பு ஆடப் பூண்
நெக்காட அக்கானத்தானை அத்தாடப் போய் நெய்த்தானைச் சேவித்தே.
விளக்கவுரை 
ஒரு விக்கல் விக்கியே உயிர் பிரியும்.அவ்வாறு உயிர் பிரிந்து போய்விட்டால் மனித உடம்பை நட்டுவிட்டோ(புதைத்துவிட்டோ) அல்லது சுடுகாட்டில் சுட்டுவிட்டோ ஊருக்கு திரும்பிவிடுவார்கள.இந்த உடம்பின் மீது ஆசை வைத்து எனது வீடு,எனது பொருட்கள் என்று வீட்டில்  சேமித்து வைக்கிறீர்கள்.சுடுகாட்டில் பேய்களோடு கூட ஆடுபவன், அவன் கையில் சிறு தீக் கொண்டு ஆடி உடலில் வெப்பு மிகுந்திருப்பவன் அவனே சிவன்.அந்தச் சிவனை மனம் நெக்குருகி ஆட அந்தச் சுடுகாட்டில் இருக்கும் அத்தனை அத்தை ஆடப் போய் நெய்த்தானம் என்கின்ற இடத்தில் இருக்கும் சிவனை சேவித்து வழிபடுவீர்களாக!(அத்தை அடக்கியல்லோ அவனிடம் போய்ச் சேரலாம்)

பிறகு அதே ஒலிச் சந்தம் மற்றும் கருத்தமைந்த புகழேந்திப் புலவர் பாடல்  
கீழே தரப்பட்டுள்ளது.
தற்கோ லீப்பூ சற்பர சத்தே தப்பாமல்சா கைக்கே நிற்பீர்
முற்கோ லிக்கோ லீப்பூ சித்தே முட்டா மல்சே வித்தே நிற்பீர்
வற்றா நெட்டோ டைப்பா ரைச்சேன் மைப்பூ கத்தே றித்தா விப்போய்
நெற்றா ளுற்றா லைப்பா கிற்சேர் நெய்த்தா னத்தா னைத்தியானித்தே.



விரிவுரை



தற்கோலீப்பூ சற்பரசத்தே தப்பாமல் 


சாகைக்கே நிற்பீர்




முற்கோல் இக்கோல் இப்பூசித்தே முட்டாமல் சேவித்தே நிற்பீர்
வற்றா நெட்டோடை பாரைச் சேன்மைப் பூகத்தே ஏறித் தாவிப் போய்
நெற்றாள் உற்றாலைப் பாகிற் சேர் நெய்த்தா னத்தா னைத்தியானித்தே.




விளக்கவுரை 
அகங்கார மமகாரங்களை மேற்கொண்டு பாசத்திரமாகிய போராட்டத்தில் அகப்பட்டு, ஒரு விதத்திலும் மரணத்தைக் கடக்கும் உபாயத்தைக் காணாமல்,தப்பாமல் மரணத்தை தழுவுகின்றனர்.முன்னால் ஆகட்டும்,பிறகு இன்றோ நாளையோ,பார்த்துக் கொள்வோம்,என்றிராமல் முந்தி விரைந்து மந்திர தந்திர முறை மாறாமல் பூசை முதலியன பண்ணி இறைவனை சேவித்து நிற்பீர்,வற்றாத நெடிய ஒடையில் உள்ள பாரை என்ற ஒரு வகை மீன்கள் மிக உயரமாக உள்ள கமுகு(பாக்கு) மரங்களின் குலைகளை உதிர்த்து ,அங்கிருந்து திரும்பி நெல்லின் தாள்களை(கதிர்களை) சிதறி உதிர்த்து,அதனருகில் ஆலையாடிக் காய்ச்சப்படும் கரும்பின் ரசப் பாகில் போய் விழுந்து ,உழவர்களுக்கு உணவாகத் தயாராக இருக்கும் வண்ணம் வளப்பம் நிறைந்த நெய்த்தானம் என்கின்ற இடத்தில் இருக்கும் சிவனை சேவித்து வழிபடுவீர்களாக!(திரு நெய்த்தானம் என்பது நம் உடலில் உள்ள இடம், குரு முகமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய இடம்)
அடுத்த மடலில் புதிய விஷயத்தோடு பேசுவோம்
இப்படிக்கு 
சாமீ அழகப்பன்