Sunday, September 19, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 5

ஒரு முறை கவி காளமேகத்திடம் 'ஈ' ஏற மலை குலுங்கியதாகப் பாடுங்கள்,என்று கேட்க  'ஈ' ஏற மலை என்ன உலகமே குலுங்கியதாகப் பாடுகிறேன்.என்று கீழ்க் கண்ட பாடலைப் பாடினார்.
'வாரணங்கள் எட்டு மகமேருவும் கடலும்
தாரணியும் நின்று சலித்தனவால்-நாரணனைப்
பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயில் ஈ மொய்த்தபோது!'
எட்டுத்திசை யானைகளும்,மஹா மேருமலையும், ஏழுகடல்களும்,உலகமும் நின்று குலுங்கின. எப்போதென்றால்,நாராயணனான கண்ணன், வெண்ணெய் திருடித் தின்றதைக் கண்ட பண் பாடிக் கொண்டிருக்கும் வாயை உடைய இடையர் குலப் பெண் பருமனான மத்தினால் அடித்து உண்டான புண்ணில்' ஈ' மொய்த்தபோது,கண்ணன் உடல் குலுங்கினதால் அந்த உடலில் எட்டுத்திசை யானைகளும்,மஹா மேருமலையும், ஏழுகடல்களும்,உலகமும் இவை அனைத்தும் அடக்கமானதால் இவை அனைத்தும் குலுங்கின.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

1 comment:

  1. இதைப் படித்ததும் இன்னொரு பாவும் நினைவுக்கு வருகிறது...

    வண்ணம் கரியனென்றும் வாய்வேதம் நாறியென்றும்
    கண்ணனிவன் என்றும் கருதாமல் - மண்ணை
    அடிப்பதுமத் தாலே அளந்தானை ஆய்ச்சி
    அடிப்பதுமத் தாலே அழ.

    என்னே! நம் பெரும்புலவர் திறம்!!!

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்