கவி காளமேகப் புலவர் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.ஏனெனில் இனி காளமேகப் புலவர் பாடல்கள் அதிகம் பார்ப்போம்.
ஒரு முறை சம்புகேசுவரம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட திருவானைக்காவல் என்று தற்போது அழைக்கப்படும் திவ்விய திருத்தலத்தில்,ஒரு பிராம்மணன்வித்தைகள் அத்தனையிலும் பூரண பாண்டித்தியம்( உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் யாரும் சொல்லித்தராமலேயே அத்தனையும் தெரிந்த புலவராக ஆகுவதற்காக) திரிபுரைச் சக்கரம் ஸ்தாபித்து அந்தசக்கரத்துக்குள்ள பீஜ மந்திரங்களை உருவெற்றிக் கொண்டிருக்கும் போது , அகிலாண்டேஸ்வரி வெள்ளைக் கலையுடுத்தி ( வெள்ளைச் சேலை ) வாயில் தாம்பூலம் தரித்து அந்தப் பிராம்மணன் வாயில் உமிழப் போகும் சமயம் அது அவனுக்கு கிடைக்கக் கூடாது என்ற விதியானபடியால்,அவன் அகிலாண்ட நாயகியை ஒரு விதவைப் பெண் இவ்வாறு செய்கிறாள் என்று எண்ணி , சீ அப்பால் போ! என்று கூறிவிட்டான்.
பிரம்மாண்ட கோடி அகிலாண்ட நாயகி சுற்றுப் பிரகாரத்தில் சுற்றி வரும்போது அங்கே பரிசாகரனாக வேலை பார்த்து வந்தவன் வாயைத்திறக்கச் சொல்ல அவனும் அவனுக்கு நல்ல நேரம் ஆனதால் தன் காதலிதான் அவ்வாறு செய்கிறாள் என்று அம்பிகை உமிழ்ந்த தாம்பூலத்தை சுவைத்து விழுங்கிவிட்டான்.
அதிலிருந்து ஊழிக்கால மேகம் மழை பொழிவது போல் பாடல்களாக பொழிந்து தள்ள ஆரம்பித்துவிட்டார்.எனவே அவரது பெயர் கவி காளமேகம் என்று அழைக்க ஆரம்பித்தனர் . அது மட்டுமில்லாமல் கோபம் வந்தால் பாடலிலேயே வசையாக பாடித் திட்டித் தீர்த்துவிடுவார்.எனவே அவரை வசை பாடக் காளமேகம் என்றும் அழைக்க ஆரம்பித்தனர்.
ஒரு முறை நாகைப்பட்டினம் காத்தான் வருணகுலாதித்தன் என்பவருடைய அன்னச் சத்திரத்தில் சாப்பிடுவதற்காக கவி காளமேகம் ஒரு நாழிகை நேரம் காத்துக் கிடந்தார்.அவருக்கோ பயங்கரமான பசி.யாரும் கவனிக்க வரவில்லை என்ற கோபத்தில் கீழ்க்கண்ட பாடலைச் சத்திரச் சுவரில் எழுதி
வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
கேள்விப்பட்ட சத்திரத்து காத்தான் வருணகுலாதித்தன் ஓடோடி வந்து கவி காளமேகத்தை சமாதானம் செய்து,மன்னிப்பு வேண்டி அவரை சாப்பிட வைத்து உபசாரம் செய்து அவ்ர் கோபம் தணித்து இப்படி வசையாகப் பாடினதை மாற்றிப் பாட வேண்ட, கவி காளமேகம் அதே பாடலையே அப்படியே வாழ்த்தாகப் பொருள் சொல்லி வாழ்த்தினார்.
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் ;-குத்தி
உலையிலிட வூரங்கும் ஓரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி யெழும்.
வசையாகப் பாடியது;-சப்திக்கின்ற கடல் சூழ்ந்தநாகைப்பட்டினத்தில் காத்தான் வருணகுலாதித்தன் அன்னச் சத்திரத்தில் சாப்பிட வருபவர்களுக்கு சூரியாஸ்தமன காலத்தில்தான் அரிசியே வரும்.அதைக் குற்றி உலையில் போட்டு சமைக்கும் போது ஊரில் உள்ளவர்கள் சத்தம் அடங்கித் தூங்கப் போய்விடுவார்கள் (நடு ராத்திரியாகிவிடும்).அப்படி சமைத்த சாதத்தை கொண்டு வந்து இலையில் போடும் போது அதிகாலையாகி வெள்ளி எழும் நேரம் ஆகிவிடும்,என்று பொருள்படும்படி வசையாகப் பொருள் கூறினார்.
வாழ்த்திப் பாடியது;- சப்திக்கின்ற கடல் சூழ்ந்தநாகைப்பட்டினத்தில் காத்தான் வருணகுலாதித்தன் அன்னச் சத்திரத்தில் சாப்பிட வருபவர்களுக்கு சூரியாஸ்தமன காலம் வரை இல்(வீட்டு) அரிசி வரும். அதைக் குற்றி உலையில் போட்டு சமைக்கும் போது ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரின் பசியும் அடங்கிப் போய்விடும்.அப்படி சமைத்த சாதத்தை கொண்டு வந்து இலையில் போட்டால் வெள்ளி எழுந்தது போல அந்தச் சோறு வெள்ளியே இலையில் வந்து விழுந்தது போல் மின்னும் .என்று பொருள்படும்படி வாழ்த்திப் பொருள் கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்