Monday, September 13, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 1

குலோத்துங்க சோழன் தனது அவையில் உள்ள ஒட்டக்கூத்தர்,புகழேந்திப் புலவர்
ஆகியோரைப் பார்த்து நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்த் தொண்டு புரிந்தால் நலமாயிருக்கும் அல்லவா!
எனவே நீங்கள் இருவரும் திருவையாறு அருகே இருக்கும் திருநெய்த்தானம் என்ற இடத்தில் உள்ள இறைவன் மேல் கருத்து,சொல்,பொருள் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கும் வண்ணம் பாடல்கள் இயற்றுங்கள் என்று கூற அவ்வண்ணமே இயற்றிய பாடல்களை கீழே காணுங்கள்.

விக்கா வுக்கா வித்தாவிப் போய் விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்.
இக்கா யத்தா சைப்பா டுற்றே யிற் றேடிப்போய் வைப்பீர் நிற்பீர்!
அக்கா டப்பேய் தொக்கா டச்சூழப்பா டத்தீ வெப்பா டப்பூண்,
நெக்கா டக்கா னத்தா னத்தா டப்போய் நெய்த்தா னைச் சேவித்தே.
                                                      (ஒட்டக் கூத்தர்)
விரிவுரை
விக்கி ஆவி தாவிப் போய் விட்டால் நட்டார் சுட்டூர் புக்கார்
இந்த காயத்து ஆசைப்பாடுற்றே இல் தேடிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடு அப்பேய் தொக்கி ஆடச் சூழப் பாடத்தீ வெப்பு ஆடப் பூண்
நெக்காட அக்கானத்தானை அத்தாடப் போய் நெய்த்தானைச் சேவித்தே.
விளக்கவுரை 
ஒரு விக்கல் விக்கியே உயிர் பிரியும்.அவ்வாறு உயிர் பிரிந்து போய்விட்டால் மனித உடம்பை நட்டுவிட்டோ(புதைத்துவிட்டோ) அல்லது சுடுகாட்டில் சுட்டுவிட்டோ ஊருக்கு திரும்பிவிடுவார்கள.இந்த உடம்பின் மீது ஆசை வைத்து எனது வீடு,எனது பொருட்கள் என்று வீட்டில்  சேமித்து வைக்கிறீர்கள்.சுடுகாட்டில் பேய்களோடு கூட ஆடுபவன், அவன் கையில் சிறு தீக் கொண்டு ஆடி உடலில் வெப்பு மிகுந்திருப்பவன் அவனே சிவன்.அந்தச் சிவனை மனம் நெக்குருகி ஆட அந்தச் சுடுகாட்டில் இருக்கும் அத்தனை அத்தை ஆடப் போய் நெய்த்தானம் என்கின்ற இடத்தில் இருக்கும் சிவனை சேவித்து வழிபடுவீர்களாக!(அத்தை அடக்கியல்லோ அவனிடம் போய்ச் சேரலாம்)

பிறகு அதே ஒலிச் சந்தம் மற்றும் கருத்தமைந்த புகழேந்திப் புலவர் பாடல்  
கீழே தரப்பட்டுள்ளது.
தற்கோ லீப்பூ சற்பர சத்தே தப்பாமல்சா கைக்கே நிற்பீர்
முற்கோ லிக்கோ லீப்பூ சித்தே முட்டா மல்சே வித்தே நிற்பீர்
வற்றா நெட்டோ டைப்பா ரைச்சேன் மைப்பூ கத்தே றித்தா விப்போய்
நெற்றா ளுற்றா லைப்பா கிற்சேர் நெய்த்தா னத்தா னைத்தியானித்தே.



விரிவுரை



தற்கோலீப்பூ சற்பரசத்தே தப்பாமல் 


சாகைக்கே நிற்பீர்




முற்கோல் இக்கோல் இப்பூசித்தே முட்டாமல் சேவித்தே நிற்பீர்
வற்றா நெட்டோடை பாரைச் சேன்மைப் பூகத்தே ஏறித் தாவிப் போய்
நெற்றாள் உற்றாலைப் பாகிற் சேர் நெய்த்தா னத்தா னைத்தியானித்தே.




விளக்கவுரை 
அகங்கார மமகாரங்களை மேற்கொண்டு பாசத்திரமாகிய போராட்டத்தில் அகப்பட்டு, ஒரு விதத்திலும் மரணத்தைக் கடக்கும் உபாயத்தைக் காணாமல்,தப்பாமல் மரணத்தை தழுவுகின்றனர்.முன்னால் ஆகட்டும்,பிறகு இன்றோ நாளையோ,பார்த்துக் கொள்வோம்,என்றிராமல் முந்தி விரைந்து மந்திர தந்திர முறை மாறாமல் பூசை முதலியன பண்ணி இறைவனை சேவித்து நிற்பீர்,வற்றாத நெடிய ஒடையில் உள்ள பாரை என்ற ஒரு வகை மீன்கள் மிக உயரமாக உள்ள கமுகு(பாக்கு) மரங்களின் குலைகளை உதிர்த்து ,அங்கிருந்து திரும்பி நெல்லின் தாள்களை(கதிர்களை) சிதறி உதிர்த்து,அதனருகில் ஆலையாடிக் காய்ச்சப்படும் கரும்பின் ரசப் பாகில் போய் விழுந்து ,உழவர்களுக்கு உணவாகத் தயாராக இருக்கும் வண்ணம் வளப்பம் நிறைந்த நெய்த்தானம் என்கின்ற இடத்தில் இருக்கும் சிவனை சேவித்து வழிபடுவீர்களாக!(திரு நெய்த்தானம் என்பது நம் உடலில் உள்ள இடம், குரு முகமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய இடம்)
அடுத்த மடலில் புதிய விஷயத்தோடு பேசுவோம்
இப்படிக்கு 
சாமீ அழகப்பன்

2 comments:

  1. மிகவும் சிறப்பாக உள்ளது. அடுத்து என்ன என எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  2. இனி வரும் காலங்களில் இலக்கியப் பேரோசை அதிகமாக இந்த வலைப்பூவில் எழும்
    இப்படிக்கு
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்